/

34. பாளையுடைக் கமுகோங்கி -  பாடல் 5

நின்ற என்ற சொல் ஞின்ற என்று மருவியுள்ளது. நகர ஞகரப் போலி என்று நன்னூல் இலக்கண நூலில் குறிப்பிடப்படும் விதிக்கு, உதாரணமாக இந்த பாடல் நன்னூல் உரையாசிரியர்களால் கருதப்படுகின்றது. செய் = வயல். நீலம் = நீல

Updated On :18 ஆகஸ்ட் 2016, 6:30 pm

பாடல் 5

செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்

மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க

நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றன்

கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே

விளக்கம்

நின்ற என்ற சொல் ஞின்ற என்று மருவியுள்ளது. நகர ஞகரப் போலி என்று நன்னூல் இலக்கண நூலில் குறிப்பிடப்படும் விதிக்கு, உதாரணமாக இந்த பாடல் நன்னூல் உரையாசிரியர்களால் கருதப்படுகின்றது. செய் = வயல். நீலம் = நீலோற்பல மலர்.

அப்பர் பெருமான் தில்லைக் கூத்தனை நேரில் காண்பதற்கு எத்தனை ஆர்வத்துடன் இருந்தாரோ, அதற்கும் மேல் நடராஜப் பெருமான் அப்பர் பிரானைக் காண்பதற்கு ஆர்வத்துடன் இருந்தார் போலும். அப்பர் பெருமான் கனகசபை எதிரே பலமுறை தொழுது எழுந்த போது, நீ எப்போது வந்தாய் என்ற குறிப்பு தோன்ற இறைவனது சிரிப்பு காணப்பட்டதாக அப்பர் பெருமான் உணர்ந்தார். இதனை கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் அப்பர் பிரான் பதிவு செய்கின்றார். சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் இந்த நிகழ்ச்சியையும் குறிப்பிடுகின்றார். கை நின்ற ஆடல் என்று, சிவபிரானின் திருக்கையில் குறிப்பு நின்றதாக இங்கே பதிவு செய்கின்றார்.

இத்தன்மையர் பல முறையும் தொழுதெழ என்று எய்தினை என மன்றாடும்

அத்தன் திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம்

மெய்த் தன்மையினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேன்மேலும்

சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார்

இவ்வாறு பெரியபுராணம் உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, தில்லைச் சிற்றம்பலத்து கூத்தனை முதல் முறையாக பார்த்தபோது அவரது புன்சிரிப்பு வெளிப்படுத்திய திருக்குறிப்பு, இந்தப் பதிகம் பாடியபோது, சிவபிரானின் கைகளில் வெளிப்படுகின்றது போலும்.

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

பொழிப்புரை

நீலோற்பல மலர்கள் நிறைந்து காணப்படும் வயல்களை உடைய தில்லைத் திருநகரில் உறையும் சிற்றம்பலவன், நின்று எரியும் தீபச்சுடர் போன்று மிளிரும் கழுத்தினை உடையவன். அவனது ஆடலைக் கண்ட, ஒளி நிறைந்ததும் மையினால் மேலும் அழகூட்டப்பட்டதும் ஆகிய கண்களை உடைய உமையம்மை, மிகவும் மகிழ்ந்து நிற்கின்றாள். இவ்வாறு பெருமான் திருநடனம் ஆடும்போது, அவனது திருக்கை என்று வந்தாய் என்ற குறிப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த அழகிய கையினைக் கண்ட கண்களுக்கு வேறு எந்த காட்சியும் உயர்ந்ததாகத் தோன்றாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.